5 மாதங்களில் பாஜக.வுக்கு ரூ. 80ஆயிரம் கோடி நன்கொடை…அன்னா ஹசாரே

கவுகாத்தி:

கடந்த 5 மாதங்களில் பாஜக கருவூலத்திற்கு ரூ. 80 ஆயிரம் கோடி நன்கொடையாக சென்றுள்ளது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் நாடுகள் பட்டியலில் ஆசியாவிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 மாதங்களில் பாஜக கருவூலத்திற்கு ரூ. 80 ஆயிரம் கோடி நன்கொடையாக சென்றுள்ளது. இதை நான் கூறவில்லை. ஃபோர்ப்ஸ் இதழ் சார்பில் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வெளிப்படைத்தன்மை ஆய்வில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நான் அமைதியாக தான் இருந்தேன். ஒரு புது அரசாங்கம் வந்தால் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், தற்போது பேசுவதற்கான நேரம் வந்துள்ளது. வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரவும். விவசாயிகள் பிரச்னைக்காவும் மார்ச் 23ம் தேதி மற்றொரு இயக்கம் தொடங்குகிறேன். சாதார மக்கள் பல பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். விவாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்ய வேண்டும். வங்கிகள் நிர்ணயம் செய்ய அனுமதிக்க கூடாது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அனைத்து விஷயங்கள் குறித்தும் மக்களிடம் பேச முடிவு செய்துள்ளேன். நாங்கள் சிறை செல்லவும் தயாராக உள்ளோம். எங்களை சிறையில் அடைத்தால் நாடு முழுவதும் உள்ள சிறைகள் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பலவீனமான ஜன் லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தது. பாஜக ஆட்சி இதை மேலும் பலவீனமாக்கிவிட்டது’’ என்றார்.

‘‘அரசு அதிகாரிகள் தங்களது சொத்து விபரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைய அரசு ரத்து செய்துவிட்டது. தனியார் நிறுவனங்கள் தனது லாபத்தில் இருந்து 7.5 சதவீதம் வரை அரசியல் கட்சிகளுக்கு நன்கொலை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது எந்த பணம் வேண்டுமானாலும் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம்’’ என்றார் அன்னா ஹசாரே.