டில்லி

கொரோனாவை எதிர்ப்பதில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி மத்திய அரசு ஊரடங்கை அமல் செய்தது.  ஆயினும் பாதிப்பு குறையவில்லை.  இதையொட்டி கடந்த 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை பிரதமர் நீட்டித்துள்ளார்.

 இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி காணொளி மூலம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “எனக்குப் பல விவகாரங்களில் பிரதமரின் கருத்துக்களுடன் உடன்பாடு கிடையாது.  ஆனால் தற்போது இவற்றுக்காகச் சண்டையிடும் நேரம் இல்லை.   கொரோனா பாதிப்பை எதிர்த்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

ஊரடங்கால் கொரோனாவை அகற்ற முடியாது.  ஊரடங்கு என்பது கொரோனா பரவுவதைக் குறைக்க உதவி புரியுமே அன்றி முழுமையா ஒழிக்க உதவாது.   மொத்தத்தில் மத்திய அரசு தற்போதைக்கு பெரிய நெருக்கடியை ஒத்தி வைத்துள்ளது.  சோதனைகளை அதிகரித்து மாநில மாவட்ட அளவில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தற்போது கொரோனாவால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜி எஸ் டி நிலுவைத் தொகையை உடனைட்யாக அளிக்க வேண்டும்.  மற்றும் சிறு, குறு தொழில்கல்  பாதிப்புகாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் மத்திய அரசு ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பை ஒழிக்கச் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கேரள அரசு இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.   அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது.  எனது தொகுதியான வயநாடு பகுதியில் கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.