சாத்னா – மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்தை ஒருவர் ரூ.83,000க்கு நாணயங்களாக அளித்து வாங்கி உள்ளார்.

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய இரு சக்கர வாகனமான ஹோண்டா ஆக்டிவா 125 ஐ அறிமுகம் செய்துள்ளது.  இந்த வாகனத்தில் புதிய பிஎஸ் 4 ரக எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இந்த இரு சக்கர வாகனம் தற்போது பலருடைய மனதைக் கவர்ந்த வாகனமாக உள்ளது.   தீபாவளியை முன்னிட்டு விற்பனை அதிகரித்த வாகனங்களில் இதுவும் ஒன்றாகும்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் கிருஷ்ணா ஹோண்டா ஷோ ரூம் என்னும் வாகன விற்பனை நிலையம் அமைந்துள்ளது.    இங்கு தீபாவளியை முன்னிட்டு விழாக்கால விற்பனை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.   இந்த விற்பனை நிலையத்துக்கு அதே ஊரைச் சேர்ந்த ராகேஷ் குப்தா என்பவர்  ஒரு ஆட்டோவில் 4 சாக்கு மூட்டைகளுடன் வந்து ஹோண்டா ஆக்டிவா வாங்கி உள்ளார்.

அவர் கொண்டு வந்த சாக்குப் மூட்டைகளில் இருந்த ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை விலையாக அளித்துள்ளார்.   இந்த நாணயத்தை எண்ண நேரமாகும் என்றாலும் தீபாவளி நேரத்தில் யாரையும் அதிருப்திக்கு உள்ளாக்க விரும்பாத விற்பனையாளர் இந்த நாணயங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு நாணயங்களாக ரூ.83000 செலுத்தி ராகேஷ் குப்தா வாகனத்தை வாங்கி உள்ளார்.   இந்த நாணயங்களை எண்ண அங்கிருந்த ஊழியர்களுக்கு நான்கு மணி நேரம் ஆகி உள்ளது.   இது குறித்து விற்பனை நிலைய உரிமையாளர் இது போல ரூ.83,000க்கு நாணயங்களாகப் பெறுவது தங்களுக்கு ஒரு  புதிய அனுபவமாக இருந்தது  எனத் தெரிவித்துள்ளார்.