மத்தியபிரதேச தேர்தல்: சமூக வலை தளங்களில் பிரபலமாக இருந்தால் மட்டுமே சீட்….காங்கிரஸ் புது நிபந்தனை

போபால்:

சமூக வலை தலங்களில் பிரபலமான நபர்களுக்கு தான் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்லில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இங்கு ஆளும் கட்சியான பாஜக.வை வீழ்த்த காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கருத்துகணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. அதனால் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட பலர் போட்டி போட்டுக் கொண்டு விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இது குறித்து கட்சியினருக்கு எழுதி உள்ள கடிதத்தில்,‘‘ வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

டுவிட்டரில் 5 ஆயிரம் பேர் பின் தொடர வேண்டும். பூத் அளவிலான தொண்டர்களை வாட்ஸ்ஆப் குரூப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் வேட்பாளர் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் லைக் செய்யவும், ரீ டுவீட் செய்யவும் வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.