மத்திய பிரதேசம்: சிறுமி பாலியல் வழக்கு….7 மணி நேரத்தில் விசாரித்து தண்டனை

போபால்:

மத்தியப்பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டம் கட்டியா கிராமத்தில் கடந்த 15-ம் தேதி தெருவில் விளையாடிய சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.சிறுவனை ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

சிறுவன் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் இளம்சிறார் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களும் குற்றப்பத்திரிகையும் நேற்று காலை 10.45 மணியளவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்றிரவு 6 மணிவரை தொடர்ந்து விசாரித்த நீதிபதி திரிப்தி பான்டே சிறுவனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். சியோனி மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு மொத்தமே 7 மணி நேரத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.