Random image

மத்திய பிரதேசத்தில் வெள்ளம்: 3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது

போபால்:

மத்திய பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் இடிந்து விழுந்தது.

மத்திய பிரதேசம் மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் குனோ ஆற்றில் ரூ.7.78 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டது. கடந்த ஜூலை 29ம் தேதி இது போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார். மத்திய பிரதேசத்தையும் ராஜஸ்தானையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் முக்கிய பங்காற்றும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக குனோ, சாம்பல், சீப் ஆகிய நதிகள் நிரம்பி வழிகின்றன. குனோ ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள இந்த முதல் வெள்ளப் பெருக்கிற்கே பாலம் தாக்குப்பிடிக்காமல் இடிந்துவிட்டது. சுமார் 500 மீட்டர் பாலம் ஆற்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 120 மிமீ மழை பெய்துள்ளது.

இதேபோல் குனோ ஆற்றில் 2 அடிக்கு ஏற்பட்ட உடைப்பில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் இரு மாவட்டங்களை இணைக்கும் சாலையை அடித்து சென்றுவிட்டது. இதனால் சுமார் 500 வீடுகள் பாதித்துள்ளது. சிவ்புரி மாவட்ட கிராமப் புறங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.