மகாராஷ்டிரா: ரெயில் நிலைய பிளாட்ஃபார்மில் பெண்ணுக்கு பிரசவம்

மும்பை:

மகாராஷ்டிராவில் ரெயில்வே பிளாட்ஃபார்மில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து லக்னோ நோக்கி புஷ்பக எக்ஸ்பிரெஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் காஞ்சனா தேவி (வயது 27) என்ற கர்ப்பிணி பயணம் செய்துள்ளார். பூசாவல் ரெயில் நிலையம் சென்ற போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

வலியால் துடித்த அவருக்கு மற்ற பெண் பயணிகள் உதவினர். அவரை ரெயில் பெட்டியில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் இதுபற்றி தெரிவித்து உள்ளனர். அவர் ரெயில்வே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து லிப்டில் காஞ்சனாவை ஏற்ற பயணிகள் முயற்சித்தனர். ஆனால், பிளாட்ஃபார்மிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. உள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.