டில்லி

முழு சுதந்திர நாடாக இருந்த இந்தியா தற்போது மோடியின் ஆட்சியில் பகுதி சுதந்திர நாடாகி உள்ளதாக பிபிசி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2014 ஆம் வருடம் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றது.   பாஜக ஒரு இந்து ஆதரவுக் கட்சி என்பதால் ஆட்சியை பிடிக்கும் போதே பல இந்து மத ஆதரவு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அக்கட்சி வாக்குறுதிகள் அளித்து இருந்தது.

அதை ஒட்டி இந்தியாவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் இந்து மதத்தைச் சேராதோர் மிகவும் துயருற்றதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பிபிசி செய்தி ஊடகம் ஒரு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது.  இந்த ஆய்வு அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரீடம் ஹவுஸ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி உள்ளது.   அனைத்து குடியரசு நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையை பிபிசி செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில், “ஃப்ரீடம் ஹவுஸ் என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனம் மக்களிடையே உள்ள தனி மனித உரிமை, அரசியல் சுதந்திரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.   இதில் இந்தியா உள்ளிட்ட அதிக அளவில் சுதந்திரம் உள்ளதாகக் கூறப்படும் நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மனித உரிமை ஆணையத்துக்கு பல விதங்களிலும் அழுத்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இஸ்லாமியருக்கு ஆதரவாக உள்ளவர்கள் பெரிதும் தக்கப்பட்டுள்ளனர்.  இவர்களால் தங்கள் அரசியல் மற்றும் சட்ட உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இது மேலும் அதிகரித்துள்ளது.  பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் ஐந்து வருடங்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்றதே இதற்குக் காரணம் ஆகும்.   இந்தியா உலக அளவில் மாபெரும் ஜனநாயக தலைமை நாடாக இருந்த  நிலையில்  மோடியின் ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை என்பது இந்துக்கள் ஆதரவு என்னும் குறுகிய மனப்பான்மையும் செயல்பட்ட தொடங்கி உள்ளது.

குறிப்பாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்கள் மீது கடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.   இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவின் 3 அண்டை நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் பலர் குடியுரிமை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு தரப்பில் இது மதம் சம்பந்த வன்கொடுமைகளுக்கு உள்ளானோருக்கு ஆதரவான நடவடிக்கை எனக் கூற்|அப்ப்ட்ட்து.  ஆனால் பாஜகவின் திட்டப்படி இந்தியாவில் இந்துக்களை அதிக எண்ணிக்கையில் ஆக்க இந்த சட்டம் இயற்றப்பட்டதாக ஆர்வலர்கள் கூறி வருகின்றன.  இந்நிலையில் கொரோனா தொற்று வரவே இந்தியாவில் மேலும் சுதந்திர இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு அறிவித்த திடீர் ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு மற்றும் பணி இழந்து சொந்த ஊருக்கு திரும்பவும் பணம் இன்றி வாடும் நிலை உண்டானது.  நூற்றுக்கணக்கான மைல் தூரம் பலர் நடந்து சென்றதும் அதில் சிலர் வழியிலேயே உயிர் இழந்ததும் மறக்க முடியாததாகும்.  மோடியின் ஆட்சியில் இந்தியா தனது முழு சுதந்திரத்தை இழந்து பகுதி சுதந்திர நாடு ஆகி உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.