நியூசிலாந்து: பயணிகள் விமானம் அருகே பறந்த ஆளில்லா விமானம்…278 பேர் தப்பினர்

--

வெலிங்கடன்:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து நியூசிலாந்து ஏர் விமானம் புறப்பட்டு அக்லாந்து விமானநிலையத்தில் தரையிறங்க நெருங்கி கொண்டிருந்தது. 777&200 ரக போயிங் விமானத்தில் 278 பயணிகள் இருந்தனர். ஓடுதளத்தை விமானம் நெருங்கி கொண்டிருந்தபோது 5 மீட்டர் தூரத்தில் ஆளில்லா உளவு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததை கண்டு விமானி அதிர்ச்சியடைந்தார்.

எனினும் விமானத்தை உடனடியாக திருப்ப கூடிய சூழல் அப்போது இல்லை. ஆளில்லா விமானம் மயிரிழையில் பயணிகள் விமானத்தில் மோதாமல் விலகிச் சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் உயிர் தப்பினர். ஆளில்லா விமானத்தை இயக்கியது யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விமானநிலையத்தின் அருகில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை உள்ளது. மேலும் 5 ஆயிரம் நியூசிலாந்து டாலர்கள் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. விமானநிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் 4 கி.மீ தொலைவில் தான் ஆளில்லா விமானங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் இது 2வது சம்பவமாகும். கடந்த 6ம் தேதி வான் பகுதியில் ஆளில்லா விமானம் பறப்பதாக ஒரு விமானி அளித்த புகாரின் பேரில் அக்லாந்து விமானநிலையத்தில் அரைமணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.