டில்லி

ன்னும் 5 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ.75000 கோடி முதலீடு செய்ய  உள்ளதாக அந்நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை அமெரிக்காவில் குடியேறி உலகப் புகழ் எற்ற கூகுள் நிறுவன செயல் அதிகாரி பதவி வகித்து வருகிறார்.   ஏற்கனவே பிரதமர் மோடியை சுந்தர் பிச்சை பலமுறை நேரில் சந்தித்து உரையாடி உள்ளார்.   இப்போது கொரோனா தொற்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி காணொளி மூலம் பேசி உள்ளனர்.

இந்த சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் கூகுள் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் பல அம்சங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.    அந்த விவாதத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான தொழில் நுட்பம், ஆன்லைன் கல்வி உள்ளிட்டவை குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன்.    அத்துடன் தற்போது கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள பணிச் சூழல் குறித்தும் பேசி உள்ளனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ”ஒரு இனிமையான உரையாடலை சுந்தர் பிச்சையுடன் நடத்தினேன்.  இருவரும் பல்வேறு விஷயம் குறித்து நிறையப் பேசினோம்.  இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு தொழில்நுட்ப மேம்பாடு மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து விவாதித்தோம்.  கொரோனா ஏற்படுத்தி உள்ள சவால்கள், சைபர் பாதுகாப்பு குறித்தும் ஆலோசித்தோம்” எனப் பதிந்துள்ளார்.

சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராகப் பிரதமர் மோடி நடத்திய வலுவான நடவடிக்கையான ஊரடங்கு குறித்துப் பாராட்டு தெரிவித்திருந்தார்.  அத்துடன் கூகுள் நிறுவனம் வரும 5 ஆண்டு முதல் 7 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் ரூ.75000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.