வாஷிங்டன்

ரடங்கால் வட இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு காற்று மாசு  குறைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

உலக அளவில் வட இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருந்தது.   டில்லி உள்ளிட்ட பல இந்திய  நகரங்கள் மக்கள் வாழவே தகுதியற்றவை எனக் கூறப்பட்டது.    இதற்குக் காரணம், ஏரோசெல் அளவு அதிகமாக இருப்பதாகும்.  ஏரோசெல் என்பது காற்றில் கலந்துள்ள திட மற்றும் திரவப்பொருட்களின் அளவாகும்.  இது அதிகமாக இருந்தால் மக்களால் சரியாகப் பார்க்க முடியாது.  அங்கு வசிப்போரின் நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு உண்டாகும்.

தற்போது வட இந்தியப் பகுதிகளில் இந்த ஏரோசல் அளவு நன்றாக குறைந்துள்ளது. வட இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி மழை பெய்ததால், ஏரோசல் அளவு குறைந்துள்ளது. வழக்கமாக மழைக்குப் பிறகு ஏரோசலின் அளவு சுற்றுச்சூழலில் கூடும். இந்த முறை தொடர்ந்து அது காற்றில் குறைவாகவே இருந்து வருகிறது.

கொரோனா பரவாமல் இருக்க இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது

நாசாவைச் சேர்ந்த பவன் குப்தா, “பல இடங்களில் ஊரடங்கு காலத்தில் சுற்றுச்சூழல் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆயினும் இதுவரை வட இந்தியப் பகுதிகளில் இந்த அளவுக்கு ஏரோசல் அளவு குறைவாக நான் பார்த்தது கிடையாது,

கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தற்போது காற்று மாசு குறைந்துள்ளது.

இந்தியாவும் உலக நாடுகளும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிப் பணி செய்ய ஆரம்பித்தாலும், ஒன்றிணைந்து நாம் திட்டத்தோடு செயல்படுவோமேயானால் தொடர்ந்து சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தின்போது தென் இந்தியாவில் ஏரோசல் அளவில் எந்த மாற்றமும் பெரிதாக இல்லை.  இன்னும் சொல்லப் போனால், சில காரணங்களால் இந்த பகுதிகளில்  அவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.