புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாகவும், 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் கொரோனா  தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் 16ந்தேதி மாலை  நிலவரப்படி கொரோனா நோயால்  216 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் 30 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், இதனால் மொத்த எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்றும்,  பொதுமக்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், தொற்று பரவலை தடுப்பதில் சிரமம் உள்ளதாகவும்,  கொரோனா அச்சத்திலிருந்து பொதுமக்கள் விலகிவிட்டனர். இது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கூறிய மாநில சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் , புதுச்சேரியில் இதுவரை 14 ஜிப்மர் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் குணமடைந்து விட்டனர். 7 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் இதுவரை 122 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது. இதில் 43 விலகப்பட்டு தற்போது 79 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.