பஞ்சாபில் 60 வயது ஆண் கர்ப்பம்..! சான்றிதழ் வழங்கி அதிர்ச்சி தந்த ஆய்வகம்..!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அல்லா திட்டா என்ற 60 வயது ஆண் ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அம்மாநிலத்தில் உள்ள கானேவால் பகுதியில் ஆய்வகம் ஒன்று உள்ளது. அந்த ஆய்வகத்துக்கு 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தமது சிறுநீர் மாதிரியை ஆய்வுக்காக தந்திருக்கிறார்.

ஆய்வு முடிவுகளின் படி, அந்த நபர் கர்ப்பம் அடைந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி அதற்கான ஆய்வு சான்றிதழையும் அந்த ஆய்வகம் வழங்கி இருக்கிறது. இது பற்றிய விவரம் வெளியாக, போலீசார் ஆய்வகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

ஆய்வக உரிமையாளர் அமின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட அமின், கானேவால் மாவட்ட மருத்துவமனையில் ஏற்கனவே பணிபுரிந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

சுகாதாரத் துறை தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், அந்த குறிப்பிட்ட ஆய்வகம் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வகம் நடத்த எந்த உரிமமும் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.