டில்லி:

ராஜ்யசபா எம்.பி தேர்தலில் உ.பி. மாநிலத்தில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஜவடேகர் உட்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதைதொடர்ந்து உ.பி. கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீதமுள்ள 25 இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் அருண் ஜெட்லி, ஜெயா பச்சன் உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் உ.பி.யில் 10 இடங்களுக்கான ஓட்டு எண்ணிக்கையில் பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு இடத்திற்கான வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 5 இடங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 4 இடங்களில் திரிணமுல் காங். வெற்றி பெற்றது.

கர்நாடகா மாநில முடிவு எதுவும் அறிவிக்கப்பட வில்லை. தெலங்கானா மாநிலத்தில் 3 இடங்களையும் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக்கான தேர்தலில் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திற்கான ஒரு இடத்தில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் ஒரு இடத்தில் இடதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது.