இலங்கை: தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை

ராமநாதபுரம்:

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 27 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியில் இருந்து 3 நாட்டுப்படகுகளிலும், நாகையில் இருந்து ஒரு நாட்டுப்படகிலும் கடந்த 8ம் தேதி 27 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகளில் இருந்த 27 தமிழக மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

அவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் மீனவர்கள் அனைவரும் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 27 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அதில் ஒரு படகில் தடை செய்யப்பட்ட வலைகள் இருந்ததால் அதில் சென்ற 7 மீனவர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்பவுள்ளனர் என்று மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.