கொழும்பு

லங்கை நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணியவும் இஸ்லாமிய பள்ளிகளான மதரசாக்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.   இந்த குண்டு வெடிப்புக்கள் தேவாலயங்களில் நிகழ்ந்ததால் ஏராளமான கிறித்துவர்கள் உயிர் இழந்தனர்.  இதையொட்டி இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  இஸ்லாமிய மக்கள் அரசு தங்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையின் பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் சரத் வீரசேகரா செய்தியாளர்களிடம், “இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்பை மனதில் கொண்டு இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணியத் தடை கொண்டு வரப்பட உள்ளது.  இலங்கை அமைச்சரவை இதற்கு அனுமதி அளித்துள்ளது.

பண்டைய காலங்களில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் புர்கா அணிந்தது கிடையாது.   இது போன்ற மத அடையாளம் மிகச் சமீபத்தில் தான் தோன்றி உள்ளது.  ஆகவே நாங்கள் அதற்குக் கட்டாயம் தடை விதிப்போம்.

அது மட்டுமின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளான மதரசாக்கள் தேசிய கல்விக் கொள்கையை மீறுகின்றன.   ஆதலால் அவற்றுக்கும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.