கன்னியாகுமரி:

தமிழக கடலோர பகுதிகளில் ஒகி புயல் தாக்கி 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த புயலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகிவிட்டதாக கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், 97 மீனவர்கள் மட்டுமே மாயமாகியிருப்பதாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

8 கடலோர கிராமங்களை சேர்ந்த திருச்சபை குருக்கள் ராணுவ அமைச்சரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் 234 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 2 ஆயிரம் மீனவர்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் 45 நாட்கள் வரை கடலில் முகாமிட்டு மீன் பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம். குஜராத் கடல் பகுதி வரை இவர்கள் சென்று வருவார்கள். தற்போது வரை 71 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ‘‘ பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் மாநில புயல் நிலவரம் குறித்து கூறப்பட்டுள்ளது. மீனவர்களை மீட்க தேவையான உதவி செய்யப்படும் என்று அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்’’ என்றார்.

‘‘அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். 5 விமானங்கள், 4 ஹெலிகாப்டர்கள், 15 கடலோர காவல் படை கப்பல்கள் மூலம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார் முதல்வர். புயல் பாதிப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

இந்திய சாட்சிகள் சட்டப்படி மாயமான ஒரு நபர் 7 ஆண்டுகள் வரை திரும்பி வரவில்லை என்றால் மட்டுமே அவர் இறந்ததாக அறிவிக்கப்படும். எந்த நேரத்திலும் அதிர்ச்சி தகவல் வருமோ என்று மீனவ குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

கடல் சீற்றம் மற்றும் சூறாவளி காற்று காரணமாக கப்பல்களில் தொடர்பியல் திறன் குறைந்துள்ளது. வயர்லெஸ் கருவிகள் 600 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு மட்டுமே வேலை செய்யும். மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து சோகத்தில் மூழ்கியுள்ளது. இவர்கள் அனைவரும் புயல் எச்சரிக்கை விடுவதற்கு முன்பே கடலுக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.