ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் கொலை: நடந்தது என்ன?

சென்னை,

துரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை  செயல்பட்டு வந்தது. அந்த நகைக்கடையின் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த கொள்ளையர்கள், நகைக்கடையில் 3.5 கிலோ தங்கத்தை கடந்த நவம்பர் 16ந்தேதி அன்று கொள்ளையடித்தனர்.

கொள்ளை தொடர்பாக சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகியோர்  ஏற்கனவே கைது செய்யப்படுள்ளனர்.

இந்த நிலையில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட  நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்கு, காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

சுமார் ஒரு மாத காலம், கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி ஆகியோர் பாலி மாவட்டம் ஜெய்த்ரான்  காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருபதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து  இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். இன்று அதிகாலை 2-30 மணி அளவில் ராம்புர்கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்ததை  அறிந்தனர். இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

கொள்ளையர்களை வீட்டைவிட்டு வெளியே வரும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கொள்ளையர்கள் பதில் ஏதும் அளிக்காமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தனர்.

இதையடுத்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல காவல்துறை அணியினர் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் வீட்டுக்குள் இருந்து காவல்துறையினர் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கவும் நிலைமையை கண்டறியவும் இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் விரைகின்றனர்.