கோயம்புத்தூர்

நாட்டின் இரண்டாம் வேலைவாய்ப்பு அதிகமுள்ள நகரான கோயம்புத்தூர் நகரில் தற்போது வேலை இழப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியத் துணிகளுக்கும் நூல்களுக்கும் உலகச் சந்தையில் நல்ல மதிப்பு இருந்தது.  சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் இருந்து ஜவுளி இறக்குமதியை செய்து வந்தது. கோவை பகுதியில் இருந்து  சீனாவுக்கு மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 கோடி கிலோ அளவில் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.   ஆனால் கடந்த 10 வருடங்களாகவே துணி ஏற்றுமதி நாடெங்கும் குறைந்து வருகிறது.   அந்த தாக்கம் கோவையில் அதிகமாக உள்ளது.

இதற்குக் குறிப்பாகச் சீனா தனக்குத் தேவைப்படும் துணிகளையும் நூல்களையும் வங்கதேசம்  மற்றும் வியட்நாமில் இருந்து வாங்கத் தொடங்கியது முக்கிய காரணம் ஆகும்.  சீனாவுக்கு துணிகளாக மட்டுமின்றி நூலாகவும் செய்து வந்த ஏற்றுமதி தற்போது அடியோடு நின்று போனது.   எனவே பல நூற்பாலைகள், நெசவுப் பட்டறைகள் ஆகியவற்றை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.    இது குறித்து தமிழக நூற்பாலை சங்க தலைவர் ஜெயபால் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயபால், “கடந்த 2017 மார்ச் வரை சுமார் 605 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.   அவற்றில் 225 தமிழகத்தில் உள்ளன.   இந்த நூற்பாலைகள் தற்போது விற்பனைக்குத் தயாராக உள்ளன.   ஆயினும் இரண்டாண்டுகள் ஆகியும் இந்த நூற்பாலைகளை வாங்க ஒருவரும முன் வரவில்லை.   இந்த நூற்பாலைகளில் உள ரூ.500 முதல் ரூ. 1000 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளன.  இந்த நூற்பாலைகளில் மட்டும் சுமார் 1.2 லட்சம் தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

அகில இந்திய ஜவுளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பிரபு, “மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக நூல் மற்றும் துணிகளின் விலை அதிகரித்துள்ளதால் மற்ற நாடுகளோடு நாம் போட்டியிட முடிவதில்லை.   தற்போதைய நிலையில் அமெரிக்க – சீன வர்த்தகப் போரை இந்தியா பயன்படுத்தி அதிக துணிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.   அத்துடன் வங்கிகள் இந்த தொழில் புரிவோருக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த குறைந்த விகிதத்தில் கடன அளிக்க வேண்டும்.   இந்த நடவடிக்கைகளால் இந்த தொழில் புத்துயிர் பெற வாய்ப்புண்டு “ எனத் தெரிவித்துள்ளார்.