சென்னை

தார் எண் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் இல்லை என ரேஷன் கடையில் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கி உள்ளது.    இதுவரை சுமார் 1.75 கோடி மக்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கி உள்ளதாகாவும், மேலும் சுமார் 5 லட்சம் மக்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துளது.  தமிழக அரசு 10 நாட்களுக்கு முன்பு இந்த மாதம் முதல் ஸ்மார்ட் கார்டுகள் மூலமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது.

ஆதார் எண்களைப் பதியாத பலருக்கு இன்னும் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படாமல் உள்ளது,   இது மக்களிடையே கடும் குழப்பத்தை உண்டாக்கியது.   இதையொட்டி   வரும் பிப்ரவரி இறுதிக்குள் அனைத்து கார்டு தாரர்களிடமும் ஆதார் எண் பெற்று விடுவோம் எனவும்   மேலும்  தமிழகத்தில் ஆதார் எண் இணைக்கப் படாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருந்தார்.   அத்துடன் ஸ்மார்ட் கார்ட் இல்லாத மக்களுக்கும் இந்த மாதம் வரை பொருட்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் ஆதார் எண் இணைக்காத கார்டுகளுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் தரப்படவில்லை.   ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர்கள், ”அமைச்சர் கூறியபடி இந்த மாதம் 1 ஆம் தேதிக்கு முன்பு வரை பொருட்களை வழங்கி வந்தோம்.   ஆனால் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விற்பனை புள்ளி இயந்திரத்தில் ஆதார் எண் இணைக்காத கார்டுகளில் பொருட்களை பதிவு செய்யும் போது அப்படி ஒரு பதிவு இல்லை என தகவல் வருகின்றன.

இதனால் அவர்களுக்கு எங்களால் ரேஷன் பொருட்கள் வழங்க இயலவில்லை.   இது போல ஒவ்வொரு கடையிலும் சுமார் 100 முதல் 200 கார்டுகள் வரை பதிவில் இல்லாமல் உள்ளது.  மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்து நாங்கள் அவர்களின் கார்டுகளை நீக்கியதாக எங்களிடம் சண்டை இடுகின்றனர்.    ஆனால் அரசு தரப்பில்தான் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.”  என தெரிவித்தனர்.