வாரங்கல்

ரு மருத்துவர் குறித்து போலி பாலியல் புகார் கொடுக்க முயன்ற ஐந்து பேரை வாரங்கல் காவதுறையினர் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் உள்ள மத்வாடா பகுதியில் பாலாஜி மருத்துவமனை என்னும் புறநோயாளிகள் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை சுதிர்குமார் என்னும் மருத்துவர் நடத்தி வருகிறார். சென்ற வாரம் இந்த மருத்துவமனைக்கு ரேவாஜு சந்தியா என்னும் பெண் தனது கணவர் மற்றும் சிலருடன் மருத்துவமனைக்கு வந்து தனக்கு முதுகு வலிப்பதாக கூறி உள்ளார்.

சுதிர்குமார் மேலும் இரு பெண் மருத்துவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பரிசோதனை செய்துள்ளார். அந்த அறைக்கு வெளியே அவருடன் வந்தவர்கள் அமர்ந்துக் கொண்டு இருந்துள்ளனர். மருத்துவர் அவரை சோதிக்கும் பொது திரும்ப சொன்ன போது அந்த பெண் வெளியே ஓடி தன்னிடம் சுதிர்குமார் தவறான முறையில் நடந்துக் கொண்டதாக கூச்சல் போட்டுள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் மற்றும் உடன் வந்தவர்கள் சுதிர்குமாரை தாக்கி உள்ளனர். அத்துடன் அவருடைய ஃபோனை திருட முயன்றுள்ளனர். இந்நிலையில் மத்வாடா காவல்நிலையத்துக்கு சென்ற சந்தியா மருத்துவர்மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மருத்துவர் மீது காவல்துறையினர் தவறான நோக்கத்துடன் ஒரு பெண்ணை தாக்க முயன்றதாக வழக்கு பதிந்தனர்.

மருத்துவரும் காவல்நிலையம் சென்று சந்தியா மற்றும் அவருடன் வந்தவர்கள் தம்மை தாக்கியதாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீதும் வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டன. அப்போது மருத்துவ மனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதித்ததில் மருத்துவர் சொன்னது உண்மை என தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் விசாரணையில் பேங்க் காலனியில் வசிக்கும் நாகேஸ்வரராவ் என்பவர் மருத்துவர் மீது கொண்ட முன் பகையால் பொய் புகார் அளிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. இவ்வாறு நடந்துக் கொள்ள ரு.1.30 லட்சம் அளித்து ராம்பாபு என்பவர் மூலம் இந்த நாடகத்தை நடத்தியதும் இதற்காக ரூ. 5 லட்சம் செலவு செய்ய நாகேஸ்வரராவ் தயாராக இருந்ததும் தெரிய வந்தது.

அதை ஒட்டி சந்தியா, ராம்பாபு உள்ளிட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவல் மூலம் இந்த சம்பவத்தின் பின்னணியில் மொத்தம் 11 பேர் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஆறு பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.