டில்லி:

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. சட்டமன்றத்திலும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் தமிழக அரசு பிறப்பித்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இவ்வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதோடு, இதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கினர்.