மகராஷ்டிரா: குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம்: 23 பேர் கைது

மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் குழந்தை கடத்தும் கும்பல் உலா வருவதாகவும், இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படியும் வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

இதனால் பொதுமக்கள் பலர் பீதியடைந்தனர். குறிப்பாக கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள், குழந்தை கடத்தல் வதந்தியை தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.

 

இந்தநிலையில் துலே மாவட்டம் சக்ரி தாலுகா ரெயின்படா கிராமத்துக்கு அரசு பேருந்தில் நேற்று சிலர் வந்திறங்கினர். அப்போது அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த சிறுமியிடம் வழி கேட்டனர்.

இதனை கவனித்த கிராமமக்கள் சிலர் அந்த நபர்கள் சிறுமியை கடத்த முயற்சிப்பதாக நினைத்து கூச்சலிட்டனர்.  அப்போது அங்கு வாரச்சந்தை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அந்த நபர்களை சுற்றி வளைத்தனர்.   அவர்களை சரமாரியாக தாக்கத்தொடங்கினர்.

சிறிது நேரத்திலேயே தாக்குதல் நடத்திய பொதுமக்களின் எண்ணிக்கை பெருகியது. சிக்கிய நபர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் 5 பேர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மராட்டிய மாநில காவல்துறையினர், 23 பேரை கைது செய்துள்ளனர்.  மேலும், குற்றவாளிகளை பிடிக்க  5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.