டில்லி:

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர்  முன்பு விசாரணை கூண்டில் நிற்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான வழக்கின் விசாரணை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் அரை மணி நேரத்தில் நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார். அதில், சிதம்பரம் விடுவிக்கப்படுவாரா அல்லது காவலுக்கு அனுப்பப்படுவாரா என்பது தெரிய வரும்.

முதலில் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா ப.சிதம்பரத்தை கைது செய்தது பற்றியும், டில்லி நீதி மன்றம் அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது குறித்தும் விளக்கியவர்,  5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ப.சிதம்பரம் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான கபில்சிபல் வாதாடினார். சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக வாதங்கள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா புகார் தொடர்பான கோப்புக்கு, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணைய ஒப்புதல் 6 செயலாளர்களால் வழங்கப்பட்டது. அதன்பிறகே அமைச்சர் ஒப்புதல் வழங்கி உள்ளார். அப்போதைய செயலாளர்களில் ஒருவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆனார். நடந்தவற்றை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து வாதாடியவர்,  ப.சிதம்பரம் மீது,  சாட்சியங்களை அழிக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டை சி.பி.ஐ வைக்கவில்லை, அப்படிப்பட்ட நிலையில் காவலில் எடுத்து விசாரிப்பது தேவையற்றது.

ஒத்துழைப்பு தராமை, சாட்சியங்களை அழிக்க முயல்தல் , தப்பிச் செல்லுதல் இந்த மூன்று விஷயங்களுமே சிதம்பரத்தின் வழக்கில் இல்லை எனும் போது கைது நடவடிக்கை அவசியமற்றது என்று கூறியவர்,  கைது செய்வது என்பது கட்டாயமல்ல என்றார்.

இந்த வழக்கே இந்திராணி முகர்ஜி சொன்னதன் அடிப்படையில் தொடரப்பட்டதுதான்,  இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து நான்கு மாதம் கழித்தே சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப் பட்டார் இந்திராணி அப்ரூவரவாக மாறியதால் இந்த கைது நடவடிக்கை , ஆனால் அப்ரூவராக மாறி தற்போது அவர் சொன்னதை , 2018லேயே சொல்லி உள்ளார்,   புதிதாக ஏதும் நடைபெற்று விடவில்லை என்று கூ றியவர்,

சிதம்பரத்தை  காவலில் எடுத்து விசாரிக்க முயல்வதற்கான முகாந்திரம் என்ன ? என்று கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ.க்கு தேவை சிதம்பரத்தின் பதிலா ? அல்லது அவர்கள் விரும்பும் பதிலா ?

அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம் தான் பேச வேண்டும் என்று கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா,  குற்றம் சாட்டப்பட்டவர் பேசக் கூடாது என கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்வி, குற்றம் சாட்டப்பட்டவர் பேசலாம், நீதிமன்ற தீர்ப்பு உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து சிங்விக்கும், துஷார் மேத்தாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து பேசிய சிங்வி, ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள வைப்பதற்கான கருவியல்ல காவலில் எடுத்து விசாரிக்கும் முறை என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கேள்விகளுக்கு பதில் தர மறுக்கிறார் என்பதற்கெல்லாம் காவலில் எடுத்து விசாரிக்க கோரலாமா ? என்றவர்,  விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் தான் ஒத்துழைப்பு தரவில்லை என அர்த்தம்; விசாரணைக்கு ஆஜராகி கேள்விகளுக்கு பதில் தரவில்லை என்பது ஒத்துழைப்பு தரவில்லை என்று அர்த்தமல்ல என்றவர், கேள்விகளுக்கு பதில் தராமல் தப்பிக்கிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா, கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் என்று கூறியவர், சிதம்பரம் ஒன்றும் சாதாரணமானவர் இல்லை ; எந்த கேள்விகளுக்கும் பதில் தராமல் இருக்கும் வலிமை படைத்த ஒருவர், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது , காவலில் எடுத்து விசாரிக்க கோருவது எங்கள் உரிமை, அதற்கான தேவையும் உள்ளது என்று கூறியவர், சிதம்பரத்தை சுற்றியிருக்கும் பாதுகாப்பு வளையத்தை நீக்காமல், எங்களால் உண்மையை நெருங்க முடியாது என்று கூறினார்.

தொடர்ந்து வாதாடிய துஷார் மேத்தா, குற்றத்தின் தன்மையை உணர்ந்து , முன் ஜாமினை மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதுதான் அந்த பாதுகாப்பு வளையம் உடைந்தது என்றும் வாதாடினார்.

இதையடுத்து ப.சிதம்பரம் பேச நீதிபதி அனுமதி வழங்கினார்.  அப்போது, ஜூன் 6, 2018 அன்று தன்னிடம் எந்த கேள்வியும் கேட்கப்பட வில்லை என்றும், தனது டிரான்ஸ்கிரிப்ட்டைக் கேளுங்கள்  என்று கூறினார். என்னிடம் ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்கு இருக்கிறதா அல்லது விவரங்களை வழங்கிய எனது மகன் இருக்கிறாரா என்று மட்டுமே என்னிடம் சிபிஐ விசாரணை நடத்தியது என்று தெரிவித்தார்.

விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் நீதிபதி தீர்ப்பு வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.