வழக்கறிஞர் காந்தி                               –                               காங்கிரஸ் கே. சந்திரசேகரன்

நெட்டிசன்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவின் தலைவர்  கே. சந்திரசேகரன் அவர்களின் முகநூல் பதிவு:

நடிகர்திலகம்  சிவாஜி  சிலை சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து நள்ளிரவில் அகற்றப்பட்டது.  இதுசம்பந்தமாக விவாதம் நியூஸ்7 சேனலில் நடைபெற்றது. நானும் கலந்துகொண்ட இந்த விவாதத்தில், சிலை அகற்றலுக்காக வாதாடிய வழக்கறிஞர் காந்தியும் கலந்துகொண்டார்.

தான் பழம்பெரும் காங்கிரஸ்காரர் என்றும், சிவாஜி மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டிருப்பதாகவும் கூறிக்கொண்ட காந்தி, காந்தி சிலைக்கான முக்கியத்துவம் குறைகிறது என்பதாலும், போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதற்காகவும் மட்டுமே இந்த வழக்கை பொதுநலன் கருதி நடத்தியதாகக் கூறினார்.

இறுதியாக, சரி, இப்போது நடு சாலையில் இருந்த நடிகர்திலகம் சிலை அகற்றியாகிவிட்டது, இனி, இதுபோல சாலையின் நடுவிலிருக்கும்  பல்வேறு சிலைகளையும் அகற்ற நீங்கள் வழக்கு தொடர்வீர்களா என்று

நெறியாளர் கேட்டதற்கு, “அதற்கு கட்சிக்காரர் வரவேண்டுமே?  என்னைப்பொறுத்தவரை வழக்கறிஞர் தொழிலில் கட்சிக்காரருக்காக  வாதாடுவேன்.  இன்று நாம் அமர்ந்திருக்கும் அரங்கக் கட்டிடத்தை இடிக்கவேண்டும் என்று கட்சிக்காரர் வந்து பணம் கொடுத்துக் கேட்டால் வாதாடுவேன்” என்று சிறிதும் நா கூசாமல் கூறினார் காந்தி.

அதற்கு நான் பதிலளிக்க எத்தனித்தபோது நிகழ்ச்சி முடிக்கப்பட்டுவிட்டது.

காந்தி என்ற பெயரை வைத்துக்கொண்டு, தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த இந்த வழக்கறிஞரைப் பார்த்து  இப்போது நாங்கள் கேட்கும் கேள்விகள் இதுதான்:

1 )  காசு கொடுத்தால் யாருக்காகவும் வாதாடுவேன் என்று கூறும் நீங்கள், நாங்கள் பணம் கொடுக்கத்  தயார், தமிழ்நாட்டில் நடு சாலையிலுள்ள 13,000 சிலைகளையும் அகற்றவேண்டும் என்று வாதிடத் தயாரா?

2 )  முதலில் காந்திசிலையை மறைக்கிறது, காந்தியின் முக்கியத்துவத்தை சிவாஜி சிலை குறைக்கிறது என்று வழக்கில் வாதாடிய நீங்கள், அடுத்து, அ.தி.மு.க அரசு இந்த சிலையை அகற்றவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியபோது அதற்கு துணைபோய் சிவாஜி சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று மாற்றி வாதாடி, காங்கிரஸ்காரர் என்று கூறும் நீங்கள் அ.தி.மு.க அரசின் கைக்கூலியாக மாறியது ஏன்?

3 )  பணத்திற்காக வாதாடியதாகக் கூறுகிறீர்கள்.  இந்த வழக்கைத் தொடுத்தவர், தியாகி சீனிவாசன் என்பவர்.  அவருடைய பின்புலத்தைப் பார்த்தால், அவரால் உங்களுக்குத் பணம் கொடுத்திருக்க இயலாது.  அப்படியானால், இந்த வழக்கிற்காகப் பணம் கொடுத்து உங்களைத் தூண்டியவர்கள் யார்?  பின்னணியிலிருந்து இயக்கியவர் யார் என்பதை வெளியிடத் தயாரா?

4 ) நான் காங்கிரஸ்காரன் என்று கூறிக்கொண்டு, உங்களை போல காசு கொடுத்தால், எதற்காகவும் வாதாடுவேன் என்பதுபோல அல்லாமல், காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகாலம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், தன் உழைப்பைக் கொடுத்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்றவேண்டும் என்ற சதிச் செயலை அரங்கேற்ற யாரிடம், என்ன பெற்றீர்கள் என்பதை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும்.

4 )  நடிகர்திலகம் சிவாஜி சிலையை அகற்றவேண்டும் என்று வாதாடிய நீங்கள், காசுகொடுத்ததற்காக வாதாடினேன் என்று மட்டுமே கூறியிருக்கவேண்டும்.   நான் காங்கிரஸ்காரன் என்று அதற்கு ஏன் கட்சியின் பெயரை இழுக்க வேண்டும்?  உங்களுடைய செயல்,  காங்கிரஸ் கட்சிக்கே ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இறுதியாக,

நாட்டில், குற்றவாளிகளுக்கும், குடிகெடுத்தவர்களுக்கும் தெருவுக்குத் தெரு சிலை இருக்க, திரையில் மட்டுமே நடித்து, நாட்டு மக்களுக்கு விளம்பரமில்லாமல் பல நன்மைகளை செய்து, காங்கிரசிற்காக பல்லாண்டுகள் உழைத்து, காலமெல்லாம் காமராஜர் தொண்டராக வாழ்ந்து, தன் கலைத் திறனால், தமிழகத்திற்கு, தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற நான்தான் போராடினேன், அதுவும் காசுக்காக என்று மார்தட்டிக்கொள்ளும்  உங்களை தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது.

“வீரபாண்டிய கட்டபொம்மன் கதையில் மட்டுமல்ல, நிஜத்திலும், எட்டப்பர்கள் வாழ்ந்ததாக ஒருநாளும் சரித்திரம் இல்லை”.