திருமலை:

திருப்பதி கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனதாக திருப்பதி தேவஸ்தானம்  தெரிவித்து உள்ளது.

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்து வருகின்றனர். அதுபோல ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்து வதற்கும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானார் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில்  தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு காணிக்கையாக செலுத்தப்படும்  தலைமுடியை தேவஸ்தானம்  சுத்தம் செய்து  6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு  இ.டெண்டர் மூலம் ஏலம் விட்டு வருகிறது.

31 அங்குலத்திற்கு மேல் நீளமுள்ள முதல் ரக தலைமுடி முதல் ரகமாகவும்,வெள்ளை நிற தலைமுடி 6வது ரகமாகவும் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று மொத்தம் 600 கிலோ தலைமுடி ஏலம் போனதில் தேவஸ்தானத்துக்குக் கிடைத்த வருமானம் ரூ.1¼ கோடி வருமானம் கிடைத்திருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.