உத்தரபிரதேசம்: தேசிய நெடுஞ்சாலை நடுவே பெரிய மா மரம்…..வைரலான புகைப்படம்

லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் சீதாபூர்&பேரலி தேசிய நெடுஞ்சாலையில் (என்ஹெச் 24) 157 கி.மீ. சாலை அமைக்கும் பணியை எரா இன்ஃப்ரா இன்ஜினியரிங் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் 2010-11ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

இதன் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டநிலையில் மைகல்கஞ்ச் என்ற இடத்தில் சாலை நடுவே பெரிய மா மரம் ஒன்று வளர்ந்து நிற்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. லக்மிபுரி ஹெய்ரியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ இதை புகைப்படம் எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலானது

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘அந்த பகுதியை சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ.க்கள் அனைருமே பாஜக.வை சேர்ந்தவர்கள். ஆனால், இந்த அவலம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதன் மூலம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பதை காட்டுகிறது’’ என்றார்.

இது குறித்து அந்நிறுவன திட்ட பொறுப்பாளர் அருண் சவுத்ரி கூறுகையில்,‘‘ இந்த மரத்தை அகற்றுவதற்கு வனத்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டது. இதற்கு தற்போது வரை பதில் இல்லை. இதனால் 22 சதவீத பணிகள் முழுமை அடையாமல் உள்ளது. இங்கு 50 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து இன்னும் அனுமதிக்கப்படவில்லை’’ என்றார். தங்களுக்கு அப்படி ஒரு கடிதமே வரவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி