முசாபர்நகர்:  குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை கண்டுபிடித்து, அவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் போலிசார் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், சில நாட்களுக்கு முன்பு குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 15 போலிசார் காயம் அடைந்தனர்.

இந் நிலையில் போலிசார் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு, முசாபர்நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து குடியிருப்போரை அச்சுறுத்துவதோடு, பொருட்களை சேதப்படுத்துவதாவும் புகார்கள் எழுந்தன.

அவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்டவர் 24 வயதான ஹிமேரா பர்வீன். இவரது திருமணம் வரும் மார்ச் மாதம் நடக்கிறது. இவரது வீட்டுக்குள் புகுந்த போலிசாரும், இன்னபிற ஆண்களும் துன்புறுத்த தொடங்கி இருக்கின்றனர்.

போலிசாரின் அராஜகத்தை கண்டு அலறிய அவர்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு தப்பித்து ஓடினர். போலிசாரின் பிடியில் சிக்கி சாவதை விட மாய்த்துக் கொள்வதே மேல் என்று நினைத்தோம், ஆனால் காப்பாற்றப்பட்டோம் என்கிறார் பர்வீன்.

ஆனால், எங்களது வீடு சூறையாடப்பட்டது. தந்தையை காவல்நிலையம் அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளனர் என்று வேதனையுடன் கூறினார்.

போலிசாரின் இந்த தாக்குதல் நடவடிக்கை முதல் முறை அல்ல. ஏற்கனவே பல முறை இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.