பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் புகார் தரவும்: பெண் ஒருவருக்கு பதில் அளித்துள்ள காவல்துறை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் வந்து புகார் அளிக்கும் படி காவல்துறையினர் கூறியதாக பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் மேற்கொண்டுள்ள பதிவு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஜாமீனில் வெளியே வந்து தீ வைத்து எரித்தனர். அப்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில்உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்குள் உன்னாவ் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பெண் புகார் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளது. அந்த கும்பலிடமிருந்து தப்பிய பெண், காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க முயன்றுள்ளார். ஆனால் புகரை ஏற்க மறுத்த காவல்துறையினர், பாலியல் பலாத்காரம் செய்த பின்பு வந்து புகார் கொடு, இப்போ கிளம்பு என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காவலர்களின் இந்த பதிலை கேட்ட பாதிப்புக்கு உள்ளான பெண், தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஊடகம் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அப்போது மூன்று பேர் சேர்ந்து தன் ஆடைகளை பிடித்து இழுத்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும், பின்பு, தான் அந்த இடத்தில் இருந்து தப்பிவிட்டதாகவும் கூறியுள்ள அவர், உடனடியாக புகார் அளிக்க சென்றும் அதனை ஏற்க காவல் துறையினர் மறுத்ததாகவும், இந்த சம்பவம் நடந்தது மூன்று மாதங்களாக காவல் நிலையத்திற்கு நடையாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல் நிலையத்திற்கு சென்றும், எந்த பயனும் இல்லாததால் தான் அவற்றை சமூகவலைதளம் மூலம் தாம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ள அப்பெண், புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என அந்த மூன்று பேரும் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.