சப்பாத்தி கருகியதால் தலாக்!: கணவர் மீது மனைவி புகார்

சப்பாத்தி கருகியதால், முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கணவன் கூறிய சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டம் பஹ்ரேத்தா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், “எனக்கு திருமணமாகி ஒருவருடம் ஆகிறது. திருமணம் ஆனதில் இருந்தே எனது கணவர் என்னை கொடுமை செய்துவந்தார். பலமுறை சிகரெட்டால் சூடு வைத்திருக்கிறார். ஆனாலும் பொறுத்துக்கொண்டு அவருடன் வாழ்ந்துவந்தேன்.

 

இந்த நிலையில் நேற்று கணவருக்கு சாப்பிட சப்பாத்தி செய்துகொடுத்தேன். சப்பாத்தி கருகியிருப்பதாக ஆத்திரத்துடன் சண்டையிட்ட அவர், மூன்று முறை தலாக் சொல்லி என்னை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் அப்பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி பன்ஷ்ராஜ் யாதவ் தெரிவித்தார். மேலும் தலைமறைவாகிவிட்ட அந்த பெண்ணின் கணவரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.