Random image

உத்தரபிரதேசம்: 8ம் வகுப்பு படித்த மருத்துவமனை அதிபர் அறுவை சிகிச்சை செய்த கொடுமை

லக்னோ:

உத்தரபிரேதச மாநிலம் ஷாம்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மருத்துவமனை உரிமையாளர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வீடியோ மற்றும் கம்பவுண்டர் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. இதையடுத்து அரசு தலைமை மருத்துவ அதிகாரி அசோக்குமார் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆர்யான் என்ற இந்த மருத்துவமனை ஏற்கனவே 3 முறை விதிமீறல் காரணமாக சீல் வைக்கப்பட்டது. இதன் உரிமையாளர் நார்தேவ் சிங்குக்கு உள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக மருத்துவமனை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி அடங்கிய சிடி.யை தலைமை மருத்துவருக்கு மர்ம நபர் ஒருவர் அனுப்பிவைத்துள்ளார். இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் அனைத்தும் முழுக்க முழுக்க சட்டவிரோதமாகும். இது உண்மை என்பது நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் உரிமையாளர் நார்தேவ் சிங் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார். பெண் கம்பவுண்டனர் ஒருவர் நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இந்த மருத்துவமனையில் 24 நோயாளிகள் இறந்துள்ளனர். இதில் 3 நோயாளிகளின் குடும்பத்தினர் மருத்துவமனை, டாக்டருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து அரசு தலைமை மருத்துவர் அசோக்குமார் உத்தரவிட்டார். இந்த குழுவினர் மருத்துவமனைக்கு விசாரணைக்கு சென்றபோது பாஜக தலைவர் பவான் தாரர் என்பவர் குழுவை விசாரணை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆபரேஷன் தியேட்டர் உள்ளேயும் குழுவினரை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் எவ்வித விசாரணையும் நடத்த முடியாமல் குழுவினர் திரும்பி வந்தனர்.