போபாலில் அறிவியல் நகரம் அமைக்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வாக்குறுதி

போபால்:

போபாலில் அறிவியல் நகரம் அமைக்கப்படும் என, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் திக்விஜய் சிங் உறுதியளித்துள்ளார்.


மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போபால் மக்களவை தொகுதி எம்பியாக இருக்கிறார். அவர் காங்கிரஸ் வேட்பாளராக இதே தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார்.

திக் விஜய் சிங்கை எதிர்த்து பாஜக வேட்பாளராக மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாத்வி பிரக்யா தாக்கூர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், போபால் தொகுதிக்கு தனியாக தொலை நோக்குத் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக திக்விஜய் சிங் அறிவித்துள்ளார்.

அதில்,ஐடி சிறப்பு பொருளாதார மண்டலம், மருத்துவக் கல்லூரி, பணியாற்றும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கான விடுதிகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் அறிவியல் நகரம் அமைக்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளார்.

ஆய்வுகளை செய்யும் வகையில் கூடுதலான பல்கலைக் கழகங்கள், போபால் விஷ வாயு தாக்கி பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மையம் தொடங்குவது என்றும் அவர் வெளியிட்ட தொலைநோக்கு பார்வை ஆவணத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மத்திய இந்தியாவின் மருத்துவ நகரமாக போபாலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும். ஒவ்வொரு வார்டிலும் இலவச உயர் தர சிகிச்சை அளிக்க கிளீனிக்குகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபால் மக்களவை தொகுதியில் 6-ம் கட்டமாக மே.12-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.