டில்லி:

17வது மக்களவைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்ற பெற்ற நிலையில், வயநாடு தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும்முகமாக 3 நாட்கள் வயநாட்டில் முகாமிடுகிறார். இதை தனது டிவிட்டர் முலம் தெரியப்படுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாரதியஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டி யிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி  அவரை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி முன்னணி வேட்பாளரை விட  சுமார் 4லட்சத்து 31 ஆயிரத்து 63 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதையடுத்து தன்னை  எம்பியாக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு 3 நாள் பயணம் மேற் கொள்கிறார்.

அதன்படி இன்று கேரளா வருகை தரும் ராகுல் காந்தி   அங்கு மக்களோடு தங்கி, அவர்களை சந்தித்து பேசி நன்றி தெரிவிக்கப் போவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, தனது வயநாடு வெற்றி குறித்து டிவிட் பதிவிட்ட ராகுல், தன்னை எம்பியாக தேர்வு செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து டிவிட்டில் என்னை மக்களின் பிரதிநிதியாக தேர்வு செய்த வயநாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தேர்தலில் கடினமாக உழைத்த முயற்சி செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது 3 நாட்கள் பயணமாக வயநாடு வருவதாகவும் டிவிட் போட்டுள்ளார். இதையொட்டி, வயநாடு மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் மொத்தம் 6 இடங்களில் இன்று பேரணி நடைபெற உள்ளது.

கல்பேட்டா நகரில் காலை 10.30 மணிக்கும், இரண்டாவதாக கம்பல்காட்டில் 11.45 மணிக்கும், அடுத்ததாக பனமரத்தில் 12.30 மணிக்கும், மனந்தவாடியில் 2 மணிக்கும், பில்பாலியில் 3 மணிக்கும்,,பதேரியில் 4.30 மணிக்கும் பேரணி நடத்துகிறார்.

அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார்.  வயநாடு மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் மற்றும் திருவம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் ராகுல் காந்தி பேச இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 15 நிகழ்ச்சிகளில் ராகுல் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அத்துடன் காங்கிரஸ் தொண்டர்களுடன் சந்திப்பும் நடை பெற உள்ளது.

அண்மையில் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் அவர்களின் குடும்பத்தினரையும் ராகுல்காந்தி சந்திக்க திட்டமிட்டு உள்தாக வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார். ராகுல் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகின்றனர்.

ராகுல் வருகையையொட்டி வயநாடு லோக்சபா தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.