தமிழ்வழியில் படிக்கும் 10, 12வது மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு:

மிழ்வழியில் படிக்கும் 10, 12வது மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

தமிழக கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வரும் தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது தமிழ்வழியில் படித்து வரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு  மாணவ மாணவிகளுக்கு அவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி  அருகே  கூகலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடக்க விழா  நடைபெற்றது.  ‘ஸ்மார்ட்’ வகுப்பை  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம பேசிய  அமைச்சர், தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் இடையே உள்ள வேறுபாடு அகலும் வகையில், அடுத்த ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு  சீருடைகள் மாற்றி அமைக்கப்படும் என்றார்.

மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்காக 50 சதவீதம் இடம் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட அமைச்சர்,  9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

பிளஸ்-2 படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு பல்வேறு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர்,  சிஏ எனப்படும்  பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்க பிளஸ்-2 முடித்த 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.

இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் கூடுதலாக சேர்ந்திருப்பதாகவும்,  அடுத் கல்வி ஆண்டில் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக பள்ளிகளில் தமிழ்வழி படிக்கும் மாணவ மாணவிகள் சிறந்த வருகை, ஒழுக்கம், நல்ல மதிப்பெண், சமூக சேவையில் ஆர்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரமும் என மொத்தம் 960 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு ஊக்கத்தொகை வழங்கபட இருப்பதாக அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் 4 ஆயிரத்து 622 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. இதில் கடந்த ஒரு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர்.

இலங்கையில் உள்ள நூலகத்துக்கு 1 லட்சம் சிறந்த நூல்கள் அரசின் சார்பில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.