தொடரும் தனியார்மயம்! அதானி கையில் சென்ற திருச்சி விமான நிலையம்! அதிர்ச்சி தகவல்!

டெல்லி: தனியார்மயமாக்கலுக்கு முன்மொழியப்பட்ட திருச்சி, வாரணாசி உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தொழிலதிபர் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முனைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டில் மொத்தம் 123 விமான நிலையங்களில் 14 மட்டுமே லாபத்தில் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், அந்த விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.

அதன்படி, அகமதாபாத், லக்னோ உள்ளிட்ட விமான நிலையங்கள் அதானி குழுமத்துக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. தற்போது, திருச்சி, வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், இந்தூர், ராய்பூர் ஆகிய 6 விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகள், பராமரிப்புக்காக அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.

விமான நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் திட்டத்திற்கு இந்திய விமான நிலையங்களுக்கான ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு விமான போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ளது.

ஆனால், நிதி அமைச்சகமானது,எந்த நிறுவனமோ அல்லது குழுமமோ 2 விமான நிலையங்களுக்கு மேலாக பராமரிக்க அனுமதிக்க கூடாது என் பரிந்துரை அனுப்பி இருந்தது. ஆனால், அந்த நடைமுறைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, முக்கிய கோப்புகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2020ம் ஆண்டு ஜனவரிவாக்கில் அனைத்து சட்ட நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தனியார் மயமாக்கலுக்கு விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம், விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பது, நிர்வகிப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு தனியார் வசம்.

அதில் யாரும் தலையிட முடியாது என்பதுதான். தற்போது மேலும் 6 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசு திட்டத்துக்கு நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.