மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவில் வினாடிக்கு 5,000 கன அடி நீர் சரிந்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அணைகளில் இருந்து நீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 லட்சம் கன அடி வரை சென்றது. இதனால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக மேட்டூரில் இருந்து சமீபத்தில் நீர் திறக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் மழை குறைந்துள்ளதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவை சந்தித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 25,000 கன அடியாக இருந்தது. ஆனால் கர்நாடகத்தில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டதன் காரணமாக தற்போது 5,000 கன அடி குறைந்து 20,000 கன அடியாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தாலும், நீர் இருப்பு 81.25 டி.எம்.சியாக உள்ளது. இதனால் கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு துளி அளவும் இல்லை” என்று தெரிவித்தனர்.