கிரிமினல் குற்றப்பிரிவிலிருந்து வருமான வரிச் சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் விரைவில் நீக்கம்! நிர்மலா சீத்தாராமன்

சென்னை:

கிரிமினல் குற்றப்பிரிவிலிருந்து வருமான வரிச் சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கையை மத்தியஅரசு எடுத்து வருவதாக, மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

நாட்டில் வர்த்தகத்தை பெருக்கும் வகையிலும், வர்த்தகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தெரிவித்து  உள்ளார்.

கடந்த பாஜக அரசின்போது, 2015ம் ஆண்டு, மத்திய வருவாய்த்துறை, நிதியமைச்சகம் ஆகியவை,  சட்டவிரோதப் பணப் பரிமாற்ற திருத்த விதிகளில் திருத்தம் கொண்டுவரும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து வருமான வரிச் சட்டம் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் (பிஎம்எல்ஏ) ஆகியவற்றை நீக்க திட்டமிடப்படுவதாக கூறப்பட்டது.

இந்த திட்டம் செயல்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், வர்த்தகர்களிடையே  நம்பிக்கையை ஏற்படுத்தவும் குற்றப்பிரிவில் இருந்து வருமானவரி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான ஷரத்துக்களை நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வர்த்தகர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா, இதுகுறித்து தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை 2024-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் முயற்சியில் இந்தச் சீர்திருத்தம் முக்கியமானதாக இருக்கும் என்று கூறியவர், அரசு நிறுவனங்களை வேகமாகத் தனியார் மயமாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை வேகமாக அடைய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும்,  கம்பெனிச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளை கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்குவது குறித்தும், மாற்றம் செய்வது குறித்தும் மத்தியஅரசு ஆலோசித்து வருவதாகவும், இதனால் பொதுநலனுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது,  இதுபோன்று சுமார்  46 விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்பட  இருப்பதாக தெரிவித்தார்.

இதன் மூலம் வர்த்தகர்களின் முறைகேடுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படாது, அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றவர்,  சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டம் தவிர்த்து எந்தச் சட்டமும் கிரிமினல் பிரிவிலிருந்து நீக்கப்படாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.