வருமான வரி பாக்கி: ஜெயலலிதா சொத்துக்களுக்கு உரிமை கோருகிறார் ஜெ.தீபா….

சென்னை:

ஜெயலலிதா மீதான வருமான வரி பாக்கியை தாங்கள் செலுத்த தயாராக இருப்பதாகவும், தங்களையே ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெ.தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதபா  சொத்துக்களுக்கு உரிமை கோருகின்றனர்.

மறைந்த ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி, அதிமுக நிர்வாகிகள்  புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதுபோல, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை நினைவிடமாக அரசு  மாற்றுவதை எதிர்த்து ஜெ.தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது,  மறைந்த ஜெயலலிதா ரூ.17 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாகவும், அதற்காக அவரின்  4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்தது

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை தாங்கள் செலுத்த தயாராக இருப்பதாகவும், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தாங்களே வாரிசு என்றும்  தீபா மற்றும் தீபக் மனு தாக்கல் செய்துள்ளனர். எங்களையே, ஜெயலலிதாவின் வாரிசாக தங்களை அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக தரப்பு வழக்கறிஞர்,  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் வாரிசு உரிமை கோர முடியாது என்றும், ஜெயலலிதாவின் வீடு உட்பட பல சொத்துக்கள் சொத்தாட்சியரின் பொறுப்பில் தான் உள்ளது எனவும் அதிமுக தரப்பு வாதிட்டது.

இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என பதிலளிக்க தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெ.தீபாவின் இந்த திடீர் வாதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed