2017-18ம் ஆண்டில் ரூ.10 லட்சம் கோடி வருமான வரி வசூல்

டில்லி:

கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.10.03 லட்சம் கோடி வருமான வரி வசூலாகி சாதனை படைத்துள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்தகொண்ட வாரிய உறுப்பினர் ஷப்ரி பட்டாசாலி மேலும் கூறுகையில்,‘‘2017-18ம் ஆண்டில் 6.92 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது 2016-17ம் ஆண்டை விட 1.31 கோடி அதிகமாகும்.

2017-18ம் ஆண்டில் கூடுதலாக 1.25 கோடி பேர் புதிதாக கணக்கு தாக்கல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 1.06 கோடி பேர் புதிதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வடகிழக்கு பிராந்தியத்தில் மட்டும் 1.89 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்’’ என்றார்.

வடகிழக்கு பிராந்திய வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ஜோஷி ரானே கூறுகையில்,‘‘2017-18ம் ஆண்டில் ரூ.7,097 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 16.7 சதவீதமாகும். அப்போது ரூ.6,082 கோடி மட்டுமே வசூலானது. 2018-19ம் ஆண்டிற்கு ரூ.8,357 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 17.75 சதவீதம் கூடுதலாகும்’’ என்றார்.