கருப்புபண தடுப்பு சட்டத்தில் ப.சி.குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு காரணமாக கருப்பு பணம் தடுப்பு சட்டத்தில் வருமான வரித்துறை  தொடர்ந்த வழக்கில், எழும்பூர்  பொருளாதார நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை நடத்த முடியுமா என்பது குறித்து இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர்  அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல  வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், அதுகுறித்து வருவமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளித்த நிலையிலும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் எழும்பூர் பொருளாதார  நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் மனு அளித்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, கடந்த மாதம் (ஜூன்) 25ந்தேதி விசாரணைக்கு  ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி  வழக்கு தொடர்பாக   ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.

இதற்கிடையில், தங்கள் மீது கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றம் இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை செல்லாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டருந்தது.

இந்தமனு மீதான விசாரணை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க உள்ளது. அதைத்தொடர்ந்து சிதம்பரம் குடும்பத் தினர் மீதான வழக்கு எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரிய வரும்.