பினாமி பெயரில் சொத்து குவிப்பு… 87 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

டெல்லி:

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பிறகு கருப்பு பணம் வைத்திருப்போர் அதை தங்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், தங்களது நிறுவனங்களில் வேலை பார்ப்போரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ததாகவும், சொத்துகளை பரிமாற்றம் செய்து கொண்டதாகவும் வருமான வரி துறைக்கு புகார்கள் வந்தன.

கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த பினாமி சொத்து பறிமுதல் சட்டப்படி, இது போல் பினாமி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பரிமாற்றம் செய்வது கிரிமினல் குற்றம் என்றும், இதன்கீழ் சொத்துகளை பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வருமான வரி துறை எச்சரித்தது.

இதன் பிறகும் பலர் பினாமி பெயர்களில், பணம் மற்றும் சொத்துகளை பரிமாற்றம் செய்தை வருமானவரி துறையினர் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் 87 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் பினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

பினாமி பெயரில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அந்த பணம் முற்றிலுமாக முடக்கப்படும். பினாமி கணக்குகள், ஜன்தன் கணக்குகள், செயலற்ற வங்கி கணக்குகள் என எந்த கணக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பணம் டெபாசிட் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.

இது வரை 42 சொத்துகளை முடக்கி இருக்கிறோம். இவை பல கோடி ரூபாய் மதிப்பில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் அசையும் சொத்தாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.