சென்னை:

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள  எம்எல்ஏ விடுதியில் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறை உள்பட 4 அறை களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை யினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஏற்கனவே துரை முருகனுக்கு சொந்த இடங்கள், சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் நிறுவனங்கள், சமீபத்தில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது  இந்த சோதனையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில்  பணம் பதுக்கி வைக்கப்பட்டிருபதாக வந்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும்படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பறக்கும் படையினரும்  நேற்று நள்ளிரவு எம்.எல்.ஏக்கள் விடுதியின் ‘சி’பிளாக்கில் சோதனை  நடத்தினர். சி பிளாக்கில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அறையிலும் சோதனை நடைபெற்றது. இரவு  10.30 மணிக்கு தொடங்கிய சோதனை 12.15 மணிக்கு நிறைவு பெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2017- ஆர்.கே.நகர் தேர்தலின் போது.. எம்எல்ஏக்கள் விடுதியில் வருமானவரித்துறை துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு சோதனை நடத்தியது…அதன் பிறகு தற்போது சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.