பழனி:

பிரசித்திப் பெற்ற பழனி பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படும் கடைகளில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனி கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ், பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பழனி என்றாலே நினைவுக்கு வருவது மொட்டையும், பஞ்சாமிர்தமும்தான். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் மிகவும் பிரபலம். இந்தப் பஞ்சாமிர்தம் சாப்பிட்டால் சில நோய்களும் குணமாகி விடுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை. புவிசார் குறியீடு பெற்றுள்ள பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிராக்கி அதிகம்.

இந்த பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுவதில், பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் கடைகள் பிரசித்திப் பெற்றவை.   கோவில் நிர்வாகத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கினாலும், அதைவிட கூடுதலான விற்பனை செய்யப் பட்டாலும், இவர்களின் தயாரிப்புக்கு தனி மவுசு மக்களிடையே உண்டு.

இந்த கடைகளுக்கு இன்று காலை திடீரென வந்த வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு எழுந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், இந்த சோதனையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அந்த பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.