அஞ்சல்துறையை குறி வைக்கிறது, வருமான வரித்துறை!

டில்லி,

நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் கருப்பு பண வேட்டையில் இறங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக அஞ்சல்துறையையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வநதுள்ளது.

நாட்டில் பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, புழக்கத்திற்கு விடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் மக்களை சென்றடையாமல், மீண்டும் கருப்புபண முதலைகளுக்கே சென்றுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் தடைபட்டுள்ளது. பொதுமக்கள் கொதித்துபோய் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து நாடுமுழுவதும், பணம் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண முதலைகளை வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் மோப்பம் பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆக்சிஸ் வங்கியில் பல கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல கோஆபரேட்டிவ் வங்கிகளிலும் பெருமளவு பணம் மாற்றி கொடுத்து  கருப்பு பண முதலாளிகளுக்கு உதவியாக அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

தொடர்ந்து அஞ்சலகத்துறையிலும் அதிரடி வேட்டை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

வங்கிகள் போன்றே அஞ்சலகங்களிலும் பொதுமக்கள் பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்கள் மாற்றும் வகையில் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதை கருப்பு பண முதலைகள் அஞ்சலக அதிகாரிகள் துணையோடு பொதுமக்களுக்கு விநியோகிகப்பட வேண்டிய பணத்தை மொத்தமாக அபகரித்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களை தொடர்ந்து வட மாநிலங்களில் அஞ்சலக அதிகாரிகளின் வீடுகளில், சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து தமிழகத்திலும் அஞ்சலக அலுவலகங்கள் மற்றும் அஞ்சல்துறை அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டு நடத்த வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ.அதிகாரிகள் திட்டம் தீட்டியு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, சென்னையில் உள்ள அஞ்சலக கணக்குகள் பிரிவு அலுவலர்கள் சிலரிடம், வருமான வரித்துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.