சசிகலாவிடம் சிறையில் நடந்த வருமானவரித்துறை விசாரணை நிறைவடைந்தது.

பெங்களூரு

சிகலாவிடம் பெங்களூரு சிறையில் நடத்திய வருமானவரித்துறை விசாரணை 8 மணி நேரத்துக்குப் பின் நிறைவடைந்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவருக்கும் அவர் உறவினர்களுக்கும் சொந்தமான 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அந்த சோதனையில் அவர்கள் சுமர் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி வருவதும், பல பெயர்களில் 150க்கும் அதிகமான வங்கிக்கணக்குகளில் பண பரிமாற்றம் செய்ததும் ரூ.3000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சசிகலாவின் உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்ளிட்ட பல பினாமிகளிடம் விசாரணை நடத்தி அவர்கள் சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.

அப்போது சசிகலா சிறையில் இருந்ததால் அவரிடம் அதிகாரிகளால் விசாரணை நடத்த முடியவில்லை. அவர்கள் சசிகலாவிடம் சிறையில் விசாரணை நடத்த அனுமதி கோரி பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். சிறை அதிகாரிகள் அளித்த அனுமதியின் அடிப்படையில் டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதி விசாரணை நடத்த முடிவு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.

வருமானவரித்துறை அதிகாரி வீரராகவராவ் தலைமையில் ஒரு பெண் அதிகாரி கொண்ட 5 பேர் குழு நேற்று மாலை வரை தொடர்ந்து விசாரணை நடத்தியது. சுமார் 8 மணி நேரத்துக்குப் பின் விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த விசாரணையில் சொத்துக்கள் குறித்து கேள்விகள் எழுப்பி விடை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விசாரணையின் முடிவைப் பொறுத்து சசிகலா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் எற்கனவே தெரிவித்துள்ளனர்.