சென்னை,

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து, சிறையில் உள்ள சசிகலாவை வெளியில் எடுத்து விசாரணை செய்ய வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக 187 இடங்களில் 1800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய வருமான வரி சோதனையின்போது, கோடிக்கணக்கான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள்,  1840 கோடி அளவிலான வரி ஏய்ப்பு, 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், 5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், விலைமதிப்பில்லா வைரங்கள் என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மறைந்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழியாக 27 வருடங்கள் அவருடன் இருந்த சசிகலாவே இவை அனைத்துக்கும் மூல காரணம் என்றும், அவரின் கண்ணசைவுக்கேற்பவே அவர்களது உறவினர்கள் முறைகேடாக இவ்வளவு மலைக்க வைக்கும் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு பரபரப்பன அக்ர ஹார சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே எடுத்து, அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் குறித்து விசாரணை செய்யலாமா அல்லது சிறையினுள்ளே வைத்து விசாரணை செய்யலாமா என  வருமான வரித்துறை யினர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது..

விரைவில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் டில்லி வட்டார தகவல்கள் உலா வருகின்றன.