பாஜக.வில் சேர காங்கிரஸ் அமைச்சரை மிரட்டிய ஐ.டி. அதிகாரிகள்!! சித்தராமையா

பெங்களூரு:

சோதனையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் அமைச்சரை பாஜக.வில் சேர்ந்துவிடுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர் என்று முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட்டில் குஜராத் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜக.வுக்கு தாவாமல் இருப்பதை உறுதி செய்ய பெங்களூரு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை கர்நாடக மாநில மின்துறை அமைச்சர் செய்து கொடுத்தார். இதைத் தொடர்ந்து சிவக்குமார் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவரிடம் விசாரணையையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சோதனையை தவிர்க்க சிவகுமாரை பாஜக.வில் சேருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை கேட்டுக் கொண்டனர் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடி க்கையை எதிர்த்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நேற்று கருப்பு தின பொதுக் கூட்டம் நடந்தது. அப்போது சித்தராமையா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த கூட்டத்தில் சித்தராமையா பேசுகையில், ‘‘வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ ஆகியவை மக்களை மிரட்டுவதற்காக பயன்படுத்துகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் அமைச்சர் சிவக்குமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அப்போது சோதனையை தவிர்க்க தொண்டர்களுடன் பாஜக.வில் சேர்ந்துவிடுங்கள் என்று சிவக்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்’’ என்றார்.