5வது நாளாக தொடரும் சோதனை: வி.வி.மினரல்ஸ் நிறுவன வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை:

ரி எய்ப்பு மோசடி காரணமாக  இன்று 5வது நாளாக பிரபலமான மணல் ஏற்றுமதியாளர் வைகுண்ட ராஜனுக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதன் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

வரி எய்ப்பு மோசடி காரணமாக பிரபலமான மணல் ஏற்றுமதியாளர் வைகுண்டராஜனின் வீடு மற்றும் அவரது  வி.வி.மினரல்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

விவி மினரல்ஸ் மற்றும் அதன் சார்புடைய நிறுவனங்கள் மற்றும் வைகுண்டராஜனின் தொலைக்காட்சி நிறுவனம் உள்பட  தமிழகம் முழுவதும் உள்ள  100க்கும் மேற்பட்ட இடங்களில்  500க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வைகுண்டராஜனின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள திசையன்விளை மற்றும்,  தூத்துக்குடி தெற்கு ராஜா வீதியில் உள்ள வி.வி.டைட்டானியம் நிறுவனம், பெரியசாமி நகரிலுள்ள வி.கே. மினரல்ஸ், மற்றும் மத்துவாபுரம், ராஜா யார்டு, தட்டுப்பாறை சந்திப்பு, உடன்குடி, சேந்தபூ மங்கலம், உள்பட ஏராளமான  இடங்களில் இன்று 5வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், விவி மினரல்ஸ் குழுமத்திற்கு தொடர்புடைய வங்கி கணக்குகளை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விவி.மினரல்ஸ் குழுமதிற்கு தொடர்புடைய 30 வங்கி கணக்குகள் மற்றும் 24 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி திசையன்விளையில் விவி மினரல்ஸ் தலைமை அலுவலகத்தில் வைகுண்டராஜனிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.