பினாமி வீடுகளில் ரெய்டு…..முதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:

வருமான வரி சோதனையில் முதல்வர் பழனிச்சாமியின் பினாமி வீடுகளில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் மவுனம் காக்காமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நட்சத்திர ஒப்பந்ததாரரான நாகராஜன் செய்யாதுரை நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள், உறவினர்களின் வீடுகளில் 2 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் மக்கள் அதிர்ச்சியடையும் வகையிலான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 120 கோடி ரூபாய் ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. கார்களில் கோடி கோடியாக பணம் பதுக்கி வைத்தது அம்பலமாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

2 கார்களில் இருந்த ரூ.50 கோடியையும் சேர்த்து ரூ. 150 கோடி ரொக்கம், 100 கிலோ விற்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், எஸ்.பி.கே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே ஹோட்டல்ஸ், எஸ்.பி.கே அன்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனத்தில் 110 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தமிழக அளவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்ப ந்தப்புள்ளிகளை எடுத்து சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்” என்று ஒரு தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘‘எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய ஜோன்ஸ் என்பவரது வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபக் என்பவரின் காரில் 28 கோடி ரூபாயும், ஜோன்ஸ் காரில் 25 கோடி ரூபாயும், ரவிச்ச ந்திரன் காரில் 24 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளது’’ என்று மற்றொரு தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“நெடுஞ்சாலைத் துறையில் 7,940 கோடி ரூபாய் டெண்டர் எடுத்த கான்டிராக்டர் வீடு, ஆபிசில் ஐ.டி. ரெய்டு. 180 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம் பறிமுதல். 2 மூத்த அமைச்சர்களுக்கு தொடர்பு” என்று மற்றொரு தமிழ் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையிலும், அதிர்ச்சியளி க்கும் வகையிலும் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘அதிமுகவின் டெண்டர் ராஜ்யம் எப்படி ஊழல் சாயம் பூசப்பட்ட கோரமுகத்துடன் உலா வருகிறது என்பதை எல்லோர்க்கும் உரைத்திடும் விதத்தில் அமைந்திருக்கிறது. முதல்வரின் “பினாமி”யாக இருக்கும் ஒரு ஒப்பந்ததாரர், அதே முதல்வரின் சம்பந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வளவு தகவல்கள் வெளிவந்த பிறகும் முதல்வர் வாய்மூடி மவுனியாக அமைதி காக்கிறார். எவ்வித பதிலும் சொல்லாமல் பாராமுகமாக விரதம் இருக்கிறார். மாநில மக்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன என்று வாயே திறக்காமல் முதல்வர் கனத்த அமைதி காப்பதைப் பார்க்கும் போது ஊழல் ராஜ்யம் பற்றி ம க்களுக்குப் பதில் சொல்ல முதல்வரிடம் ஏதுமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஒரு முதல்வரே உறவினர்களை வைத்து டெண்டர் எடுப்பது பொது வாழ்வில் தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது. அதுவும் தனது துறையிலேயே ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர்களை எடுக்க வைத்து கமிஷன் பார்ப்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிமுக ஆட்சியால் உருவாக்கப்பட்டுள்ள மிக மோசமான கருப்பு அத்தியாயமாக அமைந்துள்ளது. பதவிப் பிரமாண உறுதிமொழியை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி விட்டார்’’ என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘ஊழலுக்கு விளக்கம் அளிக்கவும் முன்வராமல், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவும் முன் வராமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருப்பது தமிழ்நாட்டிற்கு இழிவையும் பெருத்த தலைகுனிவையும் தந்திருக்கிறது. ஆகவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சுதந்திரமான விசாரணைக்கு வழி விட வேண்டும்.

நாகராஜன்- செய்யாதுரை மற்றும் முதல்வரின் சம்பந்தி உள்ளிட்டோரின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மறு டெண்டர் கோர நடவடிக்கை எடுக்க வேண்டும். கைமாறிய கமிஷன் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: income tax raid in binami's properties tamilnadu cm edappadi palanisamy should resign says dmk stalin, பினாமி வீடுகளில் ரெய்டு.....முதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
-=-