வெற்றியின் அளவுகோல் – வருமான வரி!: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

1. பொது.

இந்திய மக்களுக்கு ‘வரி’ ஒன்றும் புதிதல்ல.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆகி விட்டது.

அரசும் மன்னரும் தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்தே வரி செலுத்தி வருகிற

மிக மூத்த இனம் நம் இனம்.

இல்லற விழாக்களைக் கூட எல்லாரின் பங்களிப்பையும் பெற்று

பொதுவாக நடத்துகிற வழக்கம் நம் இனத்தில் தொன்மை தொட்டே இருந்து வருகிறது.

இந்த ‘பங்களிப்பு’ – வரி அன்றி வேறென்ன…?

ரொக்கமாகத் தந்தால்தான் வரி என்று நாமாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஒரு பொது நோக்கத்துக்காக, உடல் உழைப்பு ஈந்தால், அதுவும் வரிதான்.

ஆனால் ‘வரி’ என்கிற பெயரில் அது பெறப் படவில்லை. ‘கடமை’ என்று வலியுறுத்தப் பட்டது.

அதனால்தான் இன்றும், வரி செலுத்துதல் நமது தேசியக் கடமை என்று சொல்லப் படுகிறது!!!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஓர் அரசு, மக்களிடம் இருந்து வரிகளை நேரடியாகத்தான் பெற வேண்டும் என்பது இல்லை.

மறைமுகமாகவும் பெறலாம். அது எப்படி…?

வருமான வரி – யார் செலுத்துகிறார்..?

யார் வருமானம் ஈட்டுகிறாரோ, அவர்தான்.

அதாவது நேரடியாக அவரிடம் இருந்து அரசுக்குச் செல்கிறது.

விற்பனை வரி…?

நாம் ஒரு பொருளை வாங்கும் போது அதன் விலையுடன் சேர்த்து

கடைக்காரரிடம் தந்து விடுகிறோம். அவர் மொத்தமாக விற்பனை வரி செலுத்துகிறார்.

அதாவது மறைமுகமாக நம்மிடம் வரி வசூலிக்கப்பட்டு வேறு ஒருவர் மூலமாக அரசுக்குச் சென்று சேர்கிறது.

நேரடி வரி என்றால் நாம் எவ்வளவு செலுத்துகிறோம் என்பது நமக்கு திட்டவட்டமாகத் தெரிகிறது.

மறைமுக வரிகளில் நம்மால் சொல்ல முடிவதில்லை. உதாரணத்துக்கு, ஒரு மாதத்தில் நாம்

10,000 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் வாங்குகிறோம். இதில் நாம் அரசுக்கு செலுத்தும் விற்பனை வரி

எவ்வளவு…? சொல்வதற்கில்லை.

இந்த காரணத்துக்கவே, ஓர் அரசு மறைமுக வரிகள் அதிகம் விதிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் உண்டு.

ஆனாலும், பொதுவாக எல்லா நாடுகளிலுமே ‘மறைமுகமாக’ வசூலிக்கிற வரிகள்தாம் அதிகம்.

இது ஒரு வகையில் ‘வலிக்காமல் ஊசி குத்துகிற’ ‘டெக்னிக்’.

வருமான வரி – நேரடியாக செலுத்தப் படுவதால், அதன் பாதிப்பு அதிகம் தெரிகிறது.

வருமான வரி – மத்திய அரசு விதிக்கிற நேரடி வரி.

வருமான வரித் துறை – இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ்,

மத்திய நேரடி வரி வாரியம் (Central Board of Direct Taxes) மூலம்

நிர்வகிக்கப் படுகிறது.

எல்லா மாநிலங்களிலும் அநேகமாக எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும்

வருமான வரி அலுவலகம் இருக்கிறது.

வரி வசூலித்தலோடு இத்துறையின் செயல்பாடு முடிந்து விடுவதில்லை.

வரி ஏய்ப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களிடம் கணக்கில் காட்டப்படாமல் உள்ள

வருமானத்தை வெளியில் கொண்டு வந்து அதற்கான வரியையும் வசூலிப்பதுதான்

துறையின் முக்கிய பணி.

வருமான வரித்துறை மேற்கொள்ளும் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகள் காரணமாகவே,

மிகவும் பரபரப்பாகப் பேசப்படுகிற, வசீகரமான துறையாக வருமான வரித் துறை திகழ்கிறது.

மத்திய அரசின் வருவாய் இனங்களில், வருமான வரி, மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.

இந்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு நிதி ஆதாரமாக விளங்கி, நாட்டு முன்னேற்றம்,

பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகத் துணை புரிகிறது நாம் செலுத்தும் வருமான வரி.

அது சரி….. யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று எவ்வாறு, யார் தீர்மானிப்பது…?

ஒவ்வொரு வரிக்கும் தனித் தனியே சட்டமும் விதிமுறைகளும் உள்ளன.

அந்த வகையில், வருமான வரிக்கு என்று தனியே உள்ளது –

இந்திய வருமான வரிச் சட்டம் 1961.

மற்ற பிற சட்டங்களைப் போலவே, வருமான வரிச் சட்டத்திலும்,

ஆண்டுக்கு ஆண்டு பல புதிய பிரிவுகளும் திருத்தங்களும் இடம் பெற்று வருகின்றன.

2016ஆம் ஆண்டின் படி, வருமான வரிச் சட்டம் – 23 அத்தியாயங்களில், 298 பிரிவுகள்

கொண்டதாக உள்ளது. சில அட்டவணைகளும் உண்டு. அத்தனை முக்கியமானதாக இல்லை.

இந்தியாவில் உள்ள சட்டங்களில் மிக நீளமான, மிகக் கடினமான ஒன்றாக,

வருமான வரிச் சட்டத்தைக் குறிப்பிடலாம். இதில் உள்ள பல பிரிவுகள் ஒன்றுக்கொன்று

நெருங்கிய தொடர்புடையதாக பின்னிப் பிணைந்ததாக உள்ளதால், இதனைப் புரிந்து கொள்வது

மிகக் கடினமாக மாறி விடுகிறது.

புரிந்து கொள்ள கடினமாக இருப்பதனாலேயே, வருமான வரி தொடர்பான நடவடிக்கைகளுக்கு

ஒரு பட்டயக் கணக்காளர் (‘ஆடிட்டர்’) தேவைப் படுகிறார். இவர் யார்….?

இந்தியாவில் உள்ள படிப்புகளில் (Courses) உலகத் தரம் வாய்ந்த ஒன்று – ‘சி.ஏ.’ படிப்பு. (Chartered Accountancy)

இதில் தேர்ச்சி பெற்று, வருமான வரிச் சட்டத்தில் நிபுணத்துவம் கொண்ட தொழில்முறை (Professional) ஆலோசகர்தான்

‘ஆடிட்டர்’.

பலரும் கருதிக் கொண்டு இருப்பது போல வரி ஏய்ப்புக்கு வழி சொல்வது அல்ல இவரின் பணி.

சட்டப்படி என்னென்ன நியதிகள், நிபந்தனைகள் உள்ளன என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி,

சரியான வழி காட்டுகிற பொறுப்பான தொழில் இது.

உடல் ஆரோக்கியத்துக்கு மருத்துவரும் சட்டத் தீர்வுக்கு வழக்கறிஞரும் போன்றே

வருமான வரி ஆலோசனைக்கு பட்டயக் கணக்காளர். இவர், ஓர் ‘இடை ஆள்’ (middle man) அல்ல;

முகவரும் (‘agent’) அல்ல. மாறாக, சட்டம் அனுமதிக்கிற, அங்கீகரிக்கிற பிரதிநிதி. (Authorised Representative)

‘ஆடிட்டர்’ மூலமாகத்தான் வருமான வரி செலுத்தப் பட வேண்டுமா…?

நிச்சயமாக இல்லை. தானாக சுயமாகக் கணக்கிட்டும் வருமான வரி செலுத்தலாம்.

ஆனால் பல்வேறு சிக்கல்களைக் கொண்டுள்ள வருமானக் கணக்கீட்டுக்கு, ‘ஆடிட்டர்’ என்கிற

தொழில்முறை ஆலோசகர் இருத்தல் நலம்.

‘ஆடிட்டர்’ மூலம் நமக்கு வேண்டிய விளக்கங்களைப் பெற முடியும். என்றாலும், நாம் அனைவருமே

தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றுதான் வருமான வரிச் சட்டம்

வருமான வரிச் சட்டத்தை, முதல் பிரிவில் தொடங்கி, பிரிவு (‘செக்க்ஷன்’) வாரியாக

பார்த்துக் கொண்டு செல்ல இயலாது.

முதலில், அடிப்படைக் கேள்விகள் என்னென்ன உள்ளனவோ

அவற்றுக்கு விடை தெரிந்து கொண்டு, பிறகு, சட்டப் பிரிவுகளுக்குள்

செல்வதுதான் சரியாக இருக்கும்.

சரி… என்னென்ன கேள்விகள்….?

வருமானம் என்பது என்ன…?

ஒருவருக்கு எவ்வெந்த வழிகளில் வருமானம் வரலாம்…?

வரி செலுத்துவோரில் எத்தனை பிரிவுகள் உண்டு..?

வரியை எவ்வெந்த வகையில் செலுத்தலாம்..?

வரி விகிதம் என்ன..? வரி செலுத்தக் கடைசி நாள் எது…?

வரி, கூடுதல் வரி, ‘செஸ்’, வட்டி, அபராதம்… இவையெல்லாம் என்ன….? எவ்வளவு…?

பட்டியல் முடிந்து விடவில்லை.

நீண்டு கொண்டே போகும்.

ஒவ்வொன்றாகப் பார்த்து விடுவோம்.

முதலில்……

வருமான வரி என்றால் வருமானத்துக்கான வரி.

புரிகிறது. வருமானம் என்றால்….?

(தொடர்வோம்.)